சனி, 12 ஏப்ரல், 2014

அப்பாவி MLA-வின் மனைவி.


ஈரோடு-கொடுமுடி அருகேயுள்ள ஒத்தக்கடை பஸ் ஸ்டாப்பை ஒட்டியுள்ளது முன் பகுதி கீற்றுக் கொட்டகை வேயப்பட்ட எளிமையான ஓட்டு வீடு.இதில் தொடர்ந்து நான்கு முறை சோசலிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ வாக பதவியில் இருந்த க.ரா.நல்லசிவத்தின் மனைவி சரஸ்வதி அம்மாள் (80) வசித்து வருகிறார்.




ஒரு முறை எம்.எல்.ஏ பதவியில் இருந்தாலே கார்,பங்களா,தோட்டம் என்று சொத்துக்களை வாங்கி குவித்து விடும் தற்போதைய அரசியல்வாதிகள் மத்தியில்,தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ வாக பதவி வகித்து,சோசலிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவராக பொறுப்பு வகித்த க.ரா.நல்லசிவம் தனது பெயரிலோ,தனது மனைவியின் பெயரிலோ,மகன் அல்லது மகள் பெயரிலோ ஒரு சென்ட் இடம் கூட வாங்காமல்,எவ்வித சொத்தும் சேர்க்காமல் எளிமையாகவே வாழ்ந்து,எளிமையாகவே மறைந்த மகத்தான மனிதர் க.ரா.நல்லசிவம். 

அவரது மனைவி சரஸ்வதி அம்மாளிடம் கணவரைப் பற்றிய மலரும் நினைவுகள் குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது: என்னுடைய கணவர் எங்கள் திருமணத்தின் போதே எம்.எல்.ஏ வாக இருந்தார்.இப்போதுள்ள மொடக்குறிச்சி தொகுதி அப்போது சென்னிமலை தொகுதியாக இருந்தது.இந்த தொகுதியில் அகில இந்திய சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1952 ஆம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை தொடர்ந்து எம்.எல்.ஏ வாக இருந்தார். 1971-ம் ஆண்டு உடுமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்.ஊஞ்சலூர் அருகேயுள்ள கருக்கம்பாளையம் தான் சொந்த ஊர்.இங்குள்ள பூர்வீகமான வீடு ஒன்றுதான் இவரது சொத்து. 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார்.இவரது சகோதரர் நமச்சிவாயமூர்த்தி சுதந்திர போராட்ட தியாகி.நல்லசிவத்திற்கு ரவீந்திரன் என்கிற மகனும், அருணாதேவி என்கிற மகளும் உள்ளனர்.இருவருக்கும் திருமணமாகிவிட்டது.அவர்கள் யாரும் அரசியல் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
எம்.எல்.ஏ வாக பதவி வகித்த இருபது ஆண்டுகளும் விவசாயிகளுக்காவே பாடுபட்டார்.கீழ்பவானி வாய்க்கால் திட்டம் நிறைவேற முழுமையாக பாடுபட்டார்.கட்சி வேலைகளை கவனிப்பதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கும்.என்னை எப்போதும் எங்கேயும் கூட்டிச் சென்றதில்லை.அவரைப் பார்ப்பதற்காக தினமும் யாராவது சிலர் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு சோறு சமைத்து பரிமாறும் வேலையே எனக்கு சரியாக இருக்கும்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் அவருக்கு செலவே ஏற்படாது. தேர்தலில் டெபாசிட் கட்டுவது,தேர்தல் பிரச்சாரம் செய்வது உட்பட அனைத்து செலவுகளையும் பொதுமக்களே ஏற்று செய்வார்கள்.தேர்தல் சமயத்தில் சைக்கிள் பேரணி நடத்துவார்கள்.காலையில் சென்னிமலையில் தொடங்கி அரச்சலூர்,சிவகிரி,ஊஞ்சலூர்,கொடுமுடி வழியாக பிரச்சாரம் செய்து மீண்டும் அதே வழியில் சென்னிமலை சென்றடைந்து இரவு பொதுக் கூட்டம் நடத்துவார்கள்.ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.பிறகு ராம்மனோகர் லோகியாவின் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.பின்னர் அக்கட்சியின் அகில இந்திய தலைவராக பொறுப்பு வகித்தார்.

தன்னுடைய சொந்த நலனுக்காக எப்போதும் பதவியை பயன்படுத்தியதில்லை.எம்.எல்.ஏ என்கிற முறையில் சட்ட பூர்வமான பணிகளுக்கு மட்டுமே அரசு அலுவலகங்களுக்கு செல்வார். மது,சூதாட்டம் போன்றவற்றுக்கு எப்போதும் துணை நின்றதில்லை.
கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்த போது டெல்லியிலிருந்து மதிலிமாய்,ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற பெரிய பெரிய தலைவர்களெல்லாம் வீட்டிற்கு வருவார்கள்.1946ல் சென்னை மாகாண சட்டசபையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ வாக ஈஸ்வரன் இருந்த போது கீழ்பவானி பாசனத்திட்டம் கொண்டு வர பெரிதும் காரணமாக இருந்தார்.
எனது கணவர் எம்.எல்.ஏ வாக இருந்த போது கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை பயிர்களான கரும்பு,நெல்,மஞ்சள்,வாழை ஆகியவை பயிர் செய்யக்கூடாது என்று அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது.புஞ்சை பயிர்களான பருத்தி,எள், கடலை,சோளம் போன்ற பயிர்கள் மட்டுமே பயிரிட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.மேலும் பாசன பகுதியில் பயிர்வாரி தீர்வை விதிக்கப்பட்டிருந்தது.பயிர்வாரி தீர்வை என்பது என்னென்ன பயிர்கள் பயிரிடுகிறோமோ அதற்கேற்றவாறு அரசுக்கு கிஸ்தி கட்டுவது, பயிர்வாரி தீர்வையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அரசின் இந்த கெடுபிடிகளை மாற்றி அனைத்து பயிர்களையும் பயிரிடும் உரிமையை பெற்றுத் தந்து,ஏக்கர் வாரி தீர்வையைக் கொண்டுவர தனது பதவிக்காலம் முழுவதும் பாடுபட்டு அதை நிறைவேற்றினார்.எதிர்க்கட்சியில் இருந்தவாறே தனது தொகுதிக்கான பணிகளை செயல்படுத்தினார்.தமிழகத்தை சேர்ந்த காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது கொடுமுடியை சேர்ந்த நல்லசிவனும் அகில இந்திய சோசலிஸ்ட கட்சி தலைவர் பொறுப்பு வகித்தார்.
கொடுமுடியிலிருந்து அரசியல் நடத்தியதால் இவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் போய்விட்டது என்று அவரது மனைவி சரஸ்வதி வருத்தமுடன் கூறினார்.1995ம் ஆண்டு க.ரா.நல்லசிவம் காலமானார்.இறுதிக் காலங்களில் அவருக்கு வரும் பென்சன் பணத்தைக் கொண்டுதான் வாழ்க்கையை ஓட்டி வந்தோம்.

அப்போது பென்சன் ரூ.250 மட்டுமே கிடைத்து வந்தது.கடந்த திமுக ஆட்சியின் போது மொடக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த பழனிசாமி பரிந்துரையின் பேரில் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்கினார்.எஞ்சிய நாட்களை அவரது நினைவுகளுடன் கழித்து வருகிறேன் என்று கூறினார்.

மாபெரும் அரசியல் தலைவரின் மனைவியை சந்தித்த பெருமையுடன் அவரிடமிருந்து விடைபெற்றோம்