புதன், 2 ஏப்ரல், 2014

1957 தேர்தல்-மலரும் நினைவுகள்


1957 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரின் மலரும் நினைவுகள்..

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள லிங்கப்ப கவுண்டன் வலசை சேர்ந்தவர் தேங்கப்ப கவுண்டர் (90),பெருந்தலைவர் காமராஜரின் நண்பர்களில் ஒருவரான இவர் 1957-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னிமலை சட்டசபை தொகுதி வேட்பாளராக காளைமாட்டு சின்னத்தில் போட்டியிட்டார்.

 57 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் எப்படி நடைபெற்றது? எவ்வாறு பிரச்சாரம் மேற்கொண்டீர்கள்?வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தீர்களா?என்பது குறித்து அவரிடம் கேட்டபோது அப்போதைய தேர்தல் குறித்து சுவாரசியமான தகவல்களை கூறினார். 

57ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலுக்கும் இப்போது நடைபெறுகிற தேர்தலுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.அந்த பொது தேர்தலின் போது நடந்த சம்பவங்களான கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிடுவது,வாக்காளர்களுக்கு விருந்து வைத்து பணம் கொடுப்பது போன்றவை இப்போது நடைபெறும் பொது தேர்தலிலும் இடம் பெறுவது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


இது குறித்து தேங்கப்ப கவுண்டர் கூறியதாவது  1957-ம் ஆண்டு லோக்சபாவிற்கும், சட்டசபைக்கும் சேர்ந்தாற்போல் தேர்தல் நடைபெற்றது.இதில் நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு திமுக வேட்பாளராக ஈ.வி.கே.சம்பத் (ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தந்தை) போட்டியிட்டார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும் திமுக தேர்தல் கமிஷனில் அங்கீகரிக்கப்படாததால் சுயேச்சையாகவே கருதப்பட்டார்.அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆறுமுகம் என்பவர் போட்டியிட்டார்.

சென்னிமலை சட்டசபை தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காளைமாட்டு சின்னத்தில் நானும்,சோசலிஸ்ட் கட்சி சார்பில் நல்லசிவம் ஆலமரம் சின்னத்திலும்,சுந்தரம் என்பவர் சுயேச்சையாக உதயசூரியன் சின்னத்திலும்,மூன்று வேட்பாளர்கள் அந்த தேர்தலில் போட்டியிட்டோம்.அப்போது கட்சிகளுடன் கூட்டணி என்பது கிடையாது.எல்லா கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன.இப்போது இருப்பது போல் ஏராளமான கட்சிகள் இல்லை.

குறிப்பிட்டாற்போல் காங்கிரஸ்,சோசலிஸ்ட்,ஜனசங்கம் ஆகிய கட்சிகள் மட்டுமே இருந்தன.லோக்சபா தேர்தல் என்பது “ஹவுஸ் ஆப் தி பீப்பிள்” என்றே சொல்லப்பட்டது.அதே சமயம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலை “ராஜிய லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி” தேர்தல் என்று கூறப்பட்டது. 
ஓட்டு போடுவதற்கு இப்போது உள்ளது போல் எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் கிடையாது.ஒவ்வொரு வேட்பாளருக்கும்அவர்களது சின்னம் ஒட்டப்பட்ட தனித்தனி பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும்.

வாக்கு சீட்டுகளை வாக்காளர்கள் அந்தந்த சின்னக்களுக்குரிய வேட்பாளர்களின் பெட்டியில் தான் போட வேண்டும். இப்படித்தான் அந்தக் காலத்தில் தேர்தல் நடைபெற்றது.கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுப்பது அப்போதே நடைமுறையில் இருந்தது.

சிவகிரியில் எனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த காமராஜரிடம் தேர்தல் நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கினேன்.தேர்தல் செலவுகளுக்கென்று மாநிலக் கமிட்டி பணம் கொடுக்கும் வழக்கமும் அப்போது இருந்தது.அவ்வாறு மாநில கமிட்டி கொடுத்த பணத்தை வேண்டாம் என்று மறுத்து விட்டேன்.இது குறித்து காமராஜர் என்னிடம் விளக்கம் கேட்டார்.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் தான் தேர்தல் செலவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டேன்.சென்னிமலை,கொடுமுடி,மொடக்குறிச்சிஆகிய 3 பிர்க்கா,32 வில்லேஜ்,9௦௦ ஊர்களைக் கொண்டது சென்னிமலை தொகுதி.அதுதான் தற்போது மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியாக உள்ளது. 

1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலின் பொது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தியாகி மகுடபதி கவுண்டர் போட்டியிட்டார்.அப்போதே காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இருந்தது.கட்சியில் சீட் கிடைக்காத மாணிக்க சுந்தரம் என்பவர் அதிருப்தி வேட்பாளராக அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார்.அதனால் தேர்தலில் காங்கிரஸ் ஓட்டுகள் சிதறி ஆலமரம் சின்னத்தில் போட்டியிட்ட சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் நல்லசிவம் முதல் முறையாக வெற்றி பெற்றார்.

பின்னர் 1957-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் நல்லசிவத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நான் போட்டியிட்டு தீவிர பிரச்சாரம் செய்தேன்.கிராமங்களுக்கு நடந்து சென்றும்,தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிள் அல்லது மாட்டு வண்டி பூட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்வோம்.வசதியான வேட்பாளர்கள் வாடகைக் கார்களை அமர்த்திக் கொண்டு பிரச்சாரம் செய்வார்கள்.

தேர்தல் கமிஷன் அப்போதும் சில நிபந்தனைகளை விதித்திருந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய 2௦௦ ரூபாய் கட்டணம்.வேட்பாளரின் பெயரிலோ,அல்லது அவரது நெருங்கிய உறவினர்கள் பெயரில் பஸ் ரூட் பர்மிட் இருந்தால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது போன்ற கெடுபிடிகள் இருந்தது.கிராமங்களில் மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பெட்ரோமாஸ் லைட்டை பிடித்துக் கொண்டு வீடு வீடாக சென்று ஒட்டுக் கேட்போம்.கூலித் தொழிலாளர்கள் நேரத்தில் தூங்கி விடுவார்கள் என்பதால் அவர்களை எழுப்பி ஒட்டு சேகரிப்போம்.

சில கிராமங்களில் மொத்த வாக்காளர்களைக் கணக்கிட்டு ஓட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் அந்த ஊரிலுள்ள முக்கிய பிரமுகரிடம் கொடுத்து விடுவோம்.ஒரு ரூபாய் என்பது அப்போது மிகுந்த மதிப்பு.ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு வெறும் 9 ரூபாய் என்பதால் ஒரு ரூபாய் பெரிதாக பேசப்பட்டது.கிராம பிரமுகர் வாக்காளர்களை தனது வீட்டிற்கு அழைத்து அனைவருக்கும் பணத்தை பட்டுவாடா செய்வார்.

மேலும் ஒரு இடத்தில் சமையல் செய்து மாட்டு வண்டியில் சாப்பாடு கொண்டு போய் வாக்காளர்களுக்கு விருந்து வைப்போம்.வடை பாயசத்துடன் சாப்பாடு என்பது அப்போது அதிசயமான ஒன்று. ஆர்வமுடன் வாக்காளர்கள் விருந்து சாப்பிட வருவார்கள். இப்போது போல் பிரியாணி,மது என்பதெல்லாம் அறவே கிடையாது.ஊருக்கு அதிகபட்சமாக ஐம்பதிலிருந்து நூறு பேர் வரை மட்டுமே சாப்பிட வருவார்கள்.அவர்களிடம் பிரமுகர் இன்னாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கூறி விருந்து பரிமாறுவார்.

ஒலி பெருக்கிகள் கிடையாது. போஸ்டர்,நோட்டீஸ் ஆகியவையும் இருக்காது.காவிக
்கல் பவுடரில் விளக்கெண்ணெய் கலந்து சுவர்களில் சின்னங்களை வரைந்து வைப்போம்.தகரத்தால் செய்யப்பட்ட மெகா போன்கள் மூலம் தெரு முனையில் சின்னங்களை கூறி ஒட்டு சேகரிப்போம்.அன்றாடம் ஆகும் செலவுகளை தினசரி கணக்கு பார்த்து நேர் செய்வோம்.

தேர்தல் பிரச்சாரத்தின் போதும்,வாக்கு பதிவு நடைபெறும் போதும்,வாக்குகள் எண்ணப்படும் போதும் எதிர்க்கட்சியினருடன் சண்டை சச்சரவு எதுவும் வராது.சகஜமாகவே பழகி வருவோம்.தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வெற்றி பெரும் வேட்பாளர் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களின் வீடுகளுக்கு வந்து விருந்து சாப்பிட்டு செல்வார்.அது போன்ற நடைமுறைகள் இப்போது இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது.அந்த தேர்தல் முடிவில், லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஈ.வி.கே சம்பத் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் தோற்றுப் போனார்.அதே போல் சட்டசபைக்கு போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளரான நான் தோற்றுப் போனேன்.சோஷலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட நல்லசிவம் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். 

காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று காமராஜர் முதலமைச்சர் ஆனார்.பக்தவச்சலம் உள்ளாட்சி துறை அமைச்சராகவும்,முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.அதன் பின்னர் வாய்ப்புகள் வந்த போதும் தேர்தலில் போட்டியிட நான் விரும்பவில்லை. 

காமராஜர் மறைவிற்குப் பின் அரசியலிலிருந்து  ஒதுங்கி விட்டேன் என்று என்று நீண்ட பெருமூச்சுடன் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார் தேங்கப்ப கவுண்டர்