சனி, 1 ஜூன், 2013

10th மார்க்கு வாங்கறதுக்கு நாம அழக் கூடாது!?.

இன்று வெளியான 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவின் படி ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள SSV மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பயிலும் எனது மகள் சாலினி கணக்கு & அறிவியல் பாடங்களில் 100/100 மதிப்பெண்களும், சமுக அறிவியல் பாடத்தில்  100/97 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.



       தேர்வு எழுத்திய கையோடு மொழிப் பாடங்கள் தவிர மற்ற மூன்று பாடங்களிலும் 100/100 மதிப்பெண் கண்டிப்பாக வந்தாக வேண்டும்; என்ற சாலினியின் உறுதியானது நம்மையும் சிலிர்ப்பில் ஆழ்த்தியது. இன்று தேர்வு முடிவுகளும் சாலினியின் ஆழ்மன நம்பிக்கையை ஒட்டியே வெளி வந்துள்ளன.
     இந்தப் பின்னணியில் தனது ஆவி பொருள் அனைத்தையும் கூர்மை படுத்தி தம் மாணக்கர்களின் கல்வி வளர்ச்சி ஒன்றையே நோக்கமாக கருதி உழைத்த பள்ளி நிர்வாகம், முதல்வர், ஆசிரியப் பெருமக்கள்,மற்றும் அனைத்து ஊழியர்களுக்குமான நன்றியை எனது குடும்பத்தின் சார்பாக அவர்கள் தம் பாதம் தொட்டு சமர்பிக்கக்கிறோம்.


உயரிய மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ள சாலினியின் கல்வி கட்டணத்தை பள்ளி நிர்வாகமே ஏற்கிறது.  இக்கட்டணச் சலுகை எனும் அங்கீகாரமானது +2 வில் மாநில அளவில் முதலிடம் பெற உத்வேகமாக அமைய வேண்டும் என்பது பள்ளி நிர்வாகம் உள்ளீட்ட அனைவரின் அவா ஆகும்.
தொடக்கம் முதலே பள்ளியில் படிப்பதைத் தவிர தனிப்படிப்பு என எதற்கும் செல்லும் பழக்கம் இல்லாத எனது மகளிடம் கடந்த ஆண்டில் மன ரீதியான நிறைய மாற்றங்களைக் காண முடிந்தது.  எதிர் காலத்தில் IAS ஆக வேண்டும் என்ற தனது கனவு திட்டத்தை அறிவித்தது தொடங்கி அதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டு உழைக்கத் தொடங்கினார்.




      பேச்சிலும் நடையுடை பாவனைகளும் மிகுந்த முதிர்ச்சியைக் காண முடிந்தது. நாள்தோறும் அதிகாலை நான்கு மணிக்கு எழுதல் என்பது தன்னிச்சை செயலாக மாறியது. சில பல வீட்டு வேலைகளில் உதவி செய்தல், டிவி பார்த்தல், அண்டை வீட்டாரின் குழந்தைகளோடு விளையாடுதல் உள்ளீட்ட எதிலும் சமரசம் செய்யாமல் சுய ஆளுமையோடு வளைய வந்ததைக் காண முடிந்தது.
      பள்ளி நேரத்தில் மட்டும் படிப்பு என்பதில் உறுதியாக இருந்த சாலினியின் சுதந்திரத்தில் நாங்கள் துளியும் தலையிடவில்லை. பசிதால் சாப்பிடலாம், தூக்கம் வந்தால் தூங்கலாம், படிக்க வேண்டும் என் தோன்றினால் படிக்கலாம் என்ற இயற்கையை ஒட்டிய நிலையில் குடும்பம் மொத்தமும் இருந்தது. இச்சூழ்நிலை சாலினிக்கு கல்வியின் பால் புதிய அர்ப்பணிப்பை அதிகரிக்க வசதியாக இருந்தது.


       தான் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 475 என்பது குறைவு என சாலினி அழுது கொண்டிருக்க எனது மகனோ “இங்க பாரு சாலீ மார்க்கு வாங்கறதுக்காக நாம அழக் கூடாது. நாம தான் மத்தவங்களை அழ வைக்கனும். உதாரணமா; எனக்கு ரிசல்ட் வரும் போது நா என்னைக்காவது அழுதிருக்கேனா?. ஆனா என்னைப் பார்த்து ஸ்கூல்லே அழுவாங்க… வீட்டுலே அழுவாங்க… தெருவுலே அழுவாங்க… ஏன்னு தெரியுமா?. கடவுளே இந்தப் பையன் எப்படியாவது பாஸ் மார்க்கு வாங்கினா போதுமுன்னு” எனக் கூறினான். அதைக் கேட்ட சாலினியின் அழுகை ஒலி சிரிப்பு ஒலியாக மாறியது.



       ஆமா பாஸ்…!!! எனது மகன் தினேஸ்குமார் சூழ்நிலைக்கு ஏற்ப சாதுரியமாகப் பேசி நிலமையை சாமாளித்தானா?. இல்ல நிஜத்தை போட்டு உடைத்தானா பாஸ்…???.
-முருகபூபதி