வெள்ளி, 26 ஏப்ரல், 2013

போதும் பொண்ணு!.

சென்ற வாரத்தில் ஒரு மாலை வேலை, ஈரோடு-கொடுமுடி ரயில் நிலையம் அருகில் உள்ள மண்டபதில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. அதில் பொறிக்கப்பட்டு இருந்த பெயர் வித்தியாசமாகப் பட்டது.

          அதில் மணமகள் பெயர் “ போதும் பொண்ணு” என்று இருந்தது.


இது எனக்கு சாதாரணமாக பெயராக எனக்கு தோன்றவில்லை. இப்பெயருக்குப் பின்னால் சுவாரசியம் எதேனும் இருக்க வேண்டும் என நினைத்த எனது மூலை சுறுசுறுப்பாக துப்பறிய தொடங்கியது.

{இப்பவாவது நம்புங்க… எனக்கும் மூலை இருக்குன்னு}

          பிளாட்பாரத்தில் நின்று ஓவரா யோசித்துக் கொண்டு இருந்த போது இருட்டத் தொடங்கி, நான் செல்ல வேண்டிய எக்மோர் எக்ஸ்பிரஸ் வந்துவிட்டது. ஆக  “ போதும் பொண்ணு” வினாவுக்கு விடை தேடலாம் என ரயில் திருச்சி வரும் வரை மெனக்கெட்டது தான் மிச்சம்.

          “ போதும் பொண்ணு” அப்படின்னு ஒரு மணப்பெண்ணுக்குப் பெயரா?. இதே கேள்வியை வீட்டம்மாவோடு போனில் பகிர்ந்து கொண்டேன். அதை அவரின் அம்மாவோடு பேசி விடையை கொண்டு வந்தார்.

        முன்பு கிராமங்களில் ஆண் குழந்தை இல்லாமல் பெண்குழந்தைகள் பிறந்து கொண்டே இருந்தால் அடுத்த குழந்தையாவது ஆணாக இருக்க வேண்டும் என நினைத்து கடைசியாகப் பிறந்த பெண் குழந்தைக்கு “போதும் பொண்ணு” என பெயரிட்டு ஊரே அழைக்குமாம்.

      அந்த குழந்தை பள்ளி செல்லும் வயதை எட்டியவுடன் வேறு பெயரில் பள்ளி சேர்ப்பார்களாம்.பின்னர் இடைகாலப் பெயர் காலப்போக்கில் மறைந்து விடும் என்றார். இந்த மணமகளுக்கு ஏனோ  “போதும் பொண்ணு” என்றே அமைந்து விட்டது.

          குழந்தைகளின் பாலினத்தை நிர்ணயம் செய்வது ஆண்னின் குரோம்சோம்கள் என அறிவியல் கூறுகின்றது. ஆனால்  “ போதும் பொண்ணு” எனும் பெயர் எப்படி???. அய்யோ...! இப்பவே கண்ண கட்டுதே...!!

.