சனி, 26 ஏப்ரல், 2014

தேர்தல் கமிஷனின் கடமை இல்லையா....???


தேர்தல் பணி தேசப்பணிதான்....ஆனால்.............

தேர்தலுக்கு முந்தைய நாள் ஒன்பது மணிக்கு தேர்தல் மையத்திற்கு வந்து, உரிய உத்தரவை பெற்றுக்கொண்டு, அவரவர்கள் பூத்-திற்கு செல்லவேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் ஆணையின் படி எங்கள் உத்தரவைப் பெற்றுக்கொண்டு, மண்டைகாயும் சென்னை வெய்யிலில் அலைந்து திரிந்து, பூத்தைக் கண்டுபிடித்து மதியம் 12.30மணிக்கு வந்து சேர்ந்தோம்.

அது ஒரு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம். 3 பூத்கள் அங்கே இருந்தன. எதிலும் தேவையான மேசை நாற்காலிகள் இல்லை. சரி பின்னர் கொண்டுவந்து போடுவார்கள் என காத்திருந்தோம். என்னுடன் சேர்ந்து மொத்தம் 8 பெண்கள் இருந்தோம் . என் பூத்தில் இருந்தவர் 57 வயதான பெண்மணி சர்க்கரை நோயாளி. ஒருமணிநேரத்திற்கு ஒரு முறை அவர் கழிவறை செல்லவேண்டியிருந்தது.. கடவுளே.... அந்த மாதிரி ஒரு கழிவறையை நான் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. கண்டிப்பாக அந்த பயிற்சி மையத்தில் இருக்கும் மாணவர்களுக்கு சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்கள் வந்தே தீரும்...அந்த மாதிரி ஒரு மோசமான கழிப்பறைகள்.

மதியம் உணவு கையில் கொண்டு சென்றதால் பிரச்னை இல்லை.
பூத் மெட்டிரியல்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் . தேவையான மேசை நாற்காலிகள் அனைத்தும் வந்து சேர இரவு 7 மணி ஆனது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதித்து, மறுநாள் வாக்குப்பதிவுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்து முடித்து நிமிர்ந்தால் மணி இரவு ஒன்பதரைக்கு மேல் ஆகியிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. கையோடு கொண்டு போன பிரட் ஜாமை வைத்து சமாளித்தோம்.

இரவு முழுக்க தூங்கினால்தானே எழுந்திருக்க... எப்போதும் போல் 5மணிக்கு குளித்து தெளித்து...( இருக்கற வசதிகளை பயன்படுத்தித்தான்) மாதிரி வாக்குப்பதிவுக்கு தயாரானோம். 6.30க்கு ஒரே ஒரு கட்சியின் ஏஜென்ட் வந்தார். அவரை வைத்து மாதிரி வாக்குப்பதிவு முடிக்கும் சமயம்...அனைத்துக்கட்சி ஏஜென்டுகளும் வந்தார்கள். வாக்குப்பதிவு சரியாக 7 மணிக்கு ஆரம்பிக்கும்போதே 50 பேர் வரிசையில் காத்திருந்தனர்.

மத்திய சென்னையில் மட்டும், VVPAT (VOTERS VERIFIYABLE PAPER AUDIT TRAIL) முறை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இது என்ன என்றால், வாக்காளர் தாம் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை அந்தஇயந்திரத்தின் டிஸ்ப்ளேயில் காண இயலும். அது ஒரு சிறிய பேப்பரில் பிரிண்ட் ஆகும். ஆனால் அதை வாக்காளர் கையில் எடுத்து செல்ல இயலாது. இயந்திரத்தின் உள்ளேயே கலெக்ட் ஆகும். வோட்டு எண்ணும்போது ஏதேனும் பிரச்னை வந்தால், இந்த ஸ்லிப்களையும் எண்ணி சரிபார்த்துக்கொள்ளலாம். வாக்காளர் பட்டனை அழுத்தி வாக்கைப் பதிந்து, அது விவிபிஏடி- இயந்திரத்தில் டிஸ்ப்ளே ஆகி, Beep sound வருவதற்கு மட்டுமே 12 செகண்ட்கள் ஆகிறது.

எங்கள் பகுதியில் 99 சதவீதம் தெலுங்குபேசும் ஆந்திர மக்கள். போலம்மா, பென்சிலம்மா, பென்சிலய்யா, சுப்பலம்மா, நாகேஸ்வரி, சின்னவெங்கட்டராஜு, பெரிய வெங்கட்டராஜு, சின்ன பென்சிலய்யா, எர்ரம்மா, எர்ரய்யா...இந்தப்பெயர்கள்தான் வாக்காளர் பட்டியல் முழுக்க திரும்பத் திரும்ப இடம்பெற்றிருந்தன.

இடைவிடாத வாக்குப்பதிவு நடந்துகொண்டே இருந்தது.. ஒருமணிக்கு ஒருதரம் ஆண் பெண் வாக்காளர்கள் விபரம் தேர்தல் கமிஷனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பிக்கொண்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு காலை உணவு, மதிய உணவு பற்றி எல்லாம் யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. கட்சி ஏஜென்ட்களும் அமைதியாக இருந்தார்கள். வழக்கமாக கிராமப்பகுதியில் ஊர்த்தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் உணவுக்கு ஏற்பாடு செய்து விடுவார்கள்..ஆனால் இந்த முறை தேர்தல் கமிஷனின் கடுமையான கட்டுப்பாடுகள் ஏஜென்ட்களின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டன..

கட்டுப்பாடு என்னவோ சரிதான்...ஆனால் தேர்தல் கமிஷன் எங்களுக்கு உணவை ஏற்பாடு செய்யவேண்டுமல்லவா...???
சோறு, தண்ணி இல்லாமல், 13 மணிநேரம் எப்படி தொடர்ந்து வேலை செய்ய முடியும்..?? ஆனால் நாங்கள், ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த மக்களை உண்மையிலேயே இன்முகத்துடன் வரவேற்று வாக்களிக்க வைத்தோம். மொத்த வாக்காளர்கள் 1500, இதில் 1100 பேர் வாக்களித்தனர்.

மாலை 6மணிக்கு வாக்குப்பதிவு முடியும் தருணம் 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தார்கள். வாக்குப்பதிவு மையத்தின் மெயின் கேட் மூடிவைத்து, உள்ளே வரிசையில் காத்திருந்த அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப் பதிய அனுமதிக்கப்பட்டனர். இந்த இடைவெளியில் பூத்களில் இருந்த தண்ணீர்கேன்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள். நாங்கள் வாக்குப்பதிவை கவனிப்போமா...இல்ல தண்ணிபிடிச்சு வைப்பதை பார்ப்போமா..??

அனைத்துப்பணிகளும் முடித்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபிஏடி இயந்திரம் எல்லாம் சீல் வைத்து, ஜோனல் பார்ட்டி வந்து அவற்றை கலெக்ட் செய்யும்போது இரவு மணி 11.30. அது வரை தண்ணீர் கூட குடிக்கவில்லை. சென்னையில் 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததால், வெளியே எந்தக் கடைகளும் இல்லை.

எங்களுடன் பணிபுரிந்த ஆண் பணியாளர்கள் அவரவர் பாட்டைப் பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். காவல் பணியில் இருந்த ஒரு காவலர், எங்கள் நிராதரவான நிலையைப் பார்த்து, ஒரு ஆட்டோவை அழைத்து, ஆட்டோ டிரைவர் போன் நம்பரை வாங்கிக்கொண்டு, இவர்கள் சொல்லும் இடத்தில் விட்டுவிடுங்கள் என்று சொல்லி, எங்களை பத்ரமாகப் போங்க மேடம் என்று வழியனுப்பி வைத்தார்..

தேர்தல் பணியின் போது, பணியாளர்களின் அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பு இவற்றிற்கு உத்தரவாதம் அளிப்பது தேர்தல் கமிஷனின் கடமை இல்லையா....???

தேர்தல் பணி செய்தமைக்கான ஊதியம் 1300 ரூபாய் கொடுத்தார்கள். நான் 2000ம் ரூபாய் கூட எலக்சன் கமிஷனுக்கு கொடுத்து விடுகிறேன் எனக்கு தேர்தல் பணி வேண்டாம்..என்று என் உடன் வந்த பெண் அலுவலர் சொன்னார்...இதை நம் தேர்தல் ஆணையம் கவனிக்குமா...???